'ரொம்ப ஓட வைக்காதீங்க' : சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி அறிவுறுத்தல்
ஐபிஎல் 2023 சீசனின் 55வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி பிளேஆஃப் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எந்த ஒரு வீரரும் 25 பிளஸ் ரன்களை எடுக்காத நிலையிலும் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. அடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் வரை கடுமையாக போராடியும் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அணியினருக்கு தோனியின் அட்வைஸ்
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஃபினிஷராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் எம்எஸ் தோனி, 8 இன்னிங்ஸ்களில் 204.25 ஸ்ட்ரைக் ரேட்டில் 96 ரன்கள் எடுத்தார். இதில் தோனி ஆறு இன்னிங்ஸ்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார் மற்றும் அவர் 96 ரன்களில் 72 ரன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மூலம் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த சீசனில் தோனி காயத்தால் அவதிப்படுவதாகக் கூறப்படும் நிலையில், ஓடுவதைத் தவிர்க்க பெரிய ஷாட்களை மட்டுமே அடித்து ஆட அவர் விரும்புகிறார். இதனால் தான் களத்தில் பேட்டிங் செய்யும்போது அதற்கு ஏற்றவாறு ஓடி ரன் எடுப்பதை தவிர்க்குமாறு அணி வீரர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான வெற்றிக்கு பிறகு அவரே தெரிவித்துள்ளார்.