ஒரே தொடரில் 2 சதங்கள்! சச்சின், டிராவிடின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் தேவ்தத் படிக்கல்
செய்தி முன்னோட்டம்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் 26 வயதான இடதுகை பேட்டர் தேவ்தத் படிக்கல் மீண்டும் ஒரு சதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் நாளில், 168 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்த அவர் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். காலி நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்ற படிக்கல், தற்போது தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து இந்திய அணிக்கு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
சாதனை முறியடிப்பு
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிடின் 27 ஆண்டுகால சாதனை தகர்ப்பு
இலங்கை மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெளிநாட்டு அணியின் 3வது வரிசை பேட்டராகக் களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைத் தேவ்தத் படிக்கல் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2003ல் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் குவித்த 307 ரன்களே சாதனையாக இருந்தது.
மேலும், வெளிநாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் (328 ரன்கள்) என்ற சாதனையைப் படைத்து, ராகுல் டிராவிட் (321 ரன்கள் - 1998/99) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (290 ரன்கள் - 1997) ஆகியோரின் 27 ஆண்டுகால சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.
இலங்கை
இலங்கை மண்ணில் பல சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர்களின் சாதனை
இலங்கையில் 3வது வரிசையில் களம் இறங்கி ஒரே தொடரில் பல சதங்களை பதிவு செய்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்றுப் பெருமையையும் தேவ்தத் படிக்கல் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நஜ்முல் சாண்டோ ஆகிய வீரர்களே இலங்கை மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 சதங்களை அடித்துள்ளனர்.
தற்போது அந்தப் புகழ்பெற்ற வீரர்கள் பட்டியலில் 6வது வீரராக தேவ்தத் படிக்கல் இணைந்துள்ளார்.
நம்பிக்கை நட்சத்திரம்
இந்திய அணியின் நம்பிக்க நட்சத்திரமாக உருவெடுத்த படிக்கல்
சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணிக்குத் திரும்பிய தேவ்தத் படிக்கல், தமக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தத் தொடரில் இதுவரை விளையாடியுள்ள இன்னிங்ஸ்களில் மொத்தம் 328 ரன்களைக் குவித்து, இலங்கை மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்டர்களின் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் (390 ரன்கள்), ஷிகர் தவான் (358 ரன்கள்) மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரின் சாதனைகளுக்குப் பின்னால் இவர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.