கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இந்தியா vs நியூசிலாந்து மோதும் மெகா ஃபைனலை பார்க்க அகமதாபாத் செல்ல சிறப்பு ரயில்
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா vs நியூசிலாந்து இடையிலான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காணச் செல்லும் ரசிகர்களுக்காக வடக்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் தாமதமாக வெளியானதாலும், விமானக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததாலும் தவித்த ரசிகர்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
விவரங்கள்
ரயில் பயண விவரங்கள்
இந்தச் சிறப்பு ரயில் (வண்டி எண்: 04062) புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து மார்ச் 7 ஆம் தேதி இரவு 11:45 மணிக்குப் புறப்படும். இது டெல்லி கான்ட், குருகிராம் மற்றும் ஜெய்ப்பூர் வழியாகச் சென்று, மறுநாள் மதியம் 2:30 மணிக்கு அகமதாபாத் சபர்மதி நிலையத்தை அடையும். இந்த ரயிலில் மொத்தம் 19 ஏசி (3-Tier & 2-Tier AC) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
சவால்கள்
இந்திய அணியின் பயிற்சி மற்றும் சவால்கள்
இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அகமதாபாத் சென்றடைந்துள்ள நிலையில், இன்று இரவு 6 மணி முதல் 9 மணி வரை தீவிரப் பயிற்சியில் ஈடுபட உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி மதிய வேளையில் தனது பயிற்சியை முடித்துக் கொள்ளும். உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை இதுவரை இந்தியா டி20 போட்டிகளில் வென்றதில்லை என்ற மோசமான சாதனையை மாற்றியமைக்க சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி தீவிரமாக உள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் இந்தியா இருந்தாலும், சில வீரர்களின் ஃபார்ம் கவலையளிப்பதாக உள்ளது. ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராகத் திணறுவதும், வருண் சக்ரவர்த்தியின் எகனாமி ரேட் சூப்பர் 8 சுற்றில் 11.62 ஆக உயர்ந்திருப்பதும் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.