கௌதம் கம்பீர் தொடர்ந்த டீப்ஃபேக் வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பெயர், முகம் மற்றும் குரல் ஆகியவற்றை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், 'பெர்சனாலிட்டி ரைட்ஸ்' எனப்படும் தனிநபர் அடையாள உரிமையை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏஐ மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பரப்பப்படும் அவதூறான மற்றும் தவறான தகவல்களை இணையதளங்களில் இருந்து அகற்றவும் ஆணையிட்டுள்ளது. கம்பீர் தாக்கல் செய்த மனுவில், தனது அடையாளம் தெரியாத கணக்குகளால் தவறான தகவல்களைப் பரப்பவும், அதன் மூலம் வருவாய் ஈட்டவும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தனிப்பட்ட பாதிப்பு மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஒவ்வொரு பொது ஆளுமைக்கும் தேவைப்படும் கண்ணியம் மற்றும் சட்டப் பாதுகாப்பு சார்ந்தது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கின் முக்கிய பின்னணி:
கௌதம் கம்பீர் தரப்பில் முன்வைக்கப்பட்ட காரணங்கள்:
கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் இணையத்தில் உலவின. அவரது அனுமதி இல்லாமல் அவரது பெயர் மற்றும் புகைப்படங்கள் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. எக்ஸ், மெட்டா, கூகுள் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் உள்ள சர்ச்சைக்குரிய இணைப்புகளை (URLs) நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் மத்திய அரசு உட்பட 16 பிரதிநிதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2025 ஆசியக் கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.