இலங்கை-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம்
2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதி இருதரப்பு போட்டியாக நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இருந்தது. இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் முடித்துள்ளன. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இரண்டிலும் வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இலங்கை வைத்திருந்தது. ஆனால் இரண்டிலும் தோல்வியுற்று வாய்ப்பை நிராசை ஆக்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா
2021-23 சுழற்சியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-11 லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டாவது முறையாக தொடர்ந்து தகுதி பெற்றுள்ளது. முன்னதாக 2021இல் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.