தொடர்ச்சியாக ஐந்து முறை ஒற்றை இலக்க ஸ்கோர்! ஐபிஎல்லில் மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!
ஐபிஎல் 2023 இல் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமான நிலையில் உள்ளது. செவ்வாயன்று (மே 9), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 200 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றாலும், இதில் ரோஹித் ஷர்மா 8 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் தற்போது ஐபிஎல்லில் தொடர்ச்சியாக ஐந்து இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்கத்தில் ஸ்கோரைப் பெற்றுள்ளார். அவர் தொடர்ந்து ஐந்து முறை ஒற்றை இலக்க ஸ்கோரைப் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக 2017 சீசனில் ரோஹித் இதுபோல் நான்கு முறை ஒற்றை இலக்க ஸ்கோரைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 இல் ரோஹித் ஷர்மாவின் புள்ளி விபரங்கள்
தற்போதைய நிலவரப்படி, ஐபிஎல் 2023 இல் 11 போட்டிகளில் 17.36 சராசரியுடன் 191 ரன்கள் மட்டுமே ரோஹித் ஷர்மா எடுத்துள்ளார். இந்த தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது அடித்துள்ளார். ஐபிஎல்லில் 24 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ரோஹித் அடித்த அரை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ரோஹித் ஷர்மா 16 முறை டக் அவுட் ஆகி ஐபிஎல்லில் அதிகமுறை டக் அவுட் ஆனவர் என்ற மோசமான சாதனையையும் இந்த சீசனில் படைத்தார். இந்த சீசனில் மட்டும் அவர் இரண்டு முறை டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.