LOADING...
ஐபிஎல் 2026: லக்னோவை அலறவிட்ட டெல்லி கேப்பிடல்ஸ்! 26 ரன்களுக்கு 4 விக்கெட் விழுந்தும் மீண்டது எப்படி?
லக்னோவிற்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடி வெற்றி

ஐபிஎல் 2026: லக்னோவை அலறவிட்ட டெல்லி கேப்பிடல்ஸ்! 26 ரன்களுக்கு 4 விக்கெட் விழுந்தும் மீண்டது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Apr 02, 2026
06:30 am

செய்தி முன்னோட்டம்

லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லியின் துல்லியமான பந்துவீச்சால் 141 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் லுங்கி இங்கிடி (3/27) மற்றும் தமிழக வீரர் டி.நடராஜன் (3/29) ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவின் பேட்டிங் வரிசையை சரித்தனர். குறிப்பாக நடராஜன் தனது 4 ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியது டெல்லிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 35 ரன்களும், அப்துல் சமது 36 ரன்களும் எடுத்தனர்.

லக்னோ தடுமாற்றம்

தடுமாறிய லக்னோவும் பண்ட்டின் ஏமாற்றமும்

தொடக்க வீரராகக் களம் இறங்கிய லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட், முகேஷ் குமாரின் பந்துவீச்சில் துரதிர்ஷ்டவசமாக 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதுவரை 6 போட்டிகளில் தொடக்க வீரராகக் களம் இறங்கியுள்ள பண்ட், 22 சராசரியுடன் 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மிடில் ஓவர்களில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் (2 விக்கெட்) ஆகியோர் லக்னோ பேட்டர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர். மிட்செல் மார்ஷ் தனது டி20 வாழ்க்கையில் 300 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினாலும், குல்தீப் யாதவிடம் 4வது முறையாக ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் 18.4 ஓவர்கள் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

4 விக்கெட்டுகள் 

26க்கு 4 விக்கெட்: டெல்லியின் இக்கட்டான நிலை

142 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. கே.எல். ராகுல் முதல் பந்திலேயே 'டக்-அவுட்' ஆகி வெளியேறினார். இது அவரது டி20 வாழ்க்கையில் 11வது டக் ஆகும். அவரைத் தொடர்ந்து நிதிஷ் ராணா, நிசங்கா மற்றும் கேப்டன் அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. லக்னோவின் பிரின்ஸ் யாதவ் (2/20) மற்றும் ஷமி ஆகியோர் டெல்லிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டனர். இதனால் 4.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தத்தளித்தது.

Advertisement

கூட்டணி

ரிஸ்வி - ஸ்டப்ஸ்: சாதனைக் கூட்டணி

வெற்றி வாய்ப்பு நழுவிய நிலையில் இணைந்த சமீர் ரிஸ்வி மற்றும் தென்னாப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி, ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 119* ரன்கள் குவித்து டெல்லிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 70* ரன்கள் குவித்து தனது 2வது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அவருக்குப் பக்கபலமாக ஆடிய ஸ்டப்ஸ் 39* ரன்கள் எடுத்தார். இந்த 119* ரன்கள் பார்ட்னர்ஷிப், டெல்லி அணிக்கு 5வது விக்கெட்டுக்குக் கிடைத்துள்ள அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

Advertisement

புள்ளிவிவரங்கள்

புதிய சாதனைகளும் புள்ளிவிவரங்களும்

இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணிக்கு எதிராகத் தொடர்ந்து 5வது வெற்றியை டெல்லி கேப்பிடல்ஸ் பதிவு செய்துள்ளது. குல்தீப் யாதவ் தனது ஐபிஎல் பயணத்தில் 104 விக்கெட்டுகளை எட்டியுள்ளார். மேலும், 30 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த பிறகு ஐபிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் (119*) இதுவாகும். 2016இல் யூசுப் பதான் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஜோடி சேர்த்த 134* ரன்களே முதலிடத்தில் உள்ளது. லக்னோ மண்ணில் டெல்லி அணி பெற்ற இந்த வெற்றி, அந்த அணியின் தன்னம்பிக்கையை வரும் போட்டிகளில் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement