Loading...
'சாண்ட்பேப்பர்கேட்' விசாரணையில் 3 பந்துவீச்சாளர்களை விசாரிக்கவில்லை: டேவிட் வார்னர் பரபரப்பு குற்றச்சாட்டு
பந்து சேதப்படுத்திய விவகார விசாரணையில் மூடிமறைப்பு நடந்துள்ளதாக டேவிட் வார்னர் பரபரப்பு குற்றச்சாட்டு.

'சாண்ட்பேப்பர்கேட்' விசாரணையில் 3 பந்துவீச்சாளர்களை விசாரிக்கவில்லை: டேவிட் வார்னர் பரபரப்பு குற்றச்சாட்டு

எழுதியவர் Vasuki
Nov 14, 2026
12:26 pm

செய்தி முன்னோட்டம்

உலக கிரிக்கெட் வரலாற்றையே உலுக்கிய 2018-ஆம் ஆண்டு 'சாண்ட்பேப்பர்கேட்' (Sandpapergate) பந்தைச் சேதப்படுத்திய விவகாரம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை நம்பகத்தன்மையைக் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கி சனிக்கிழமையன்று (நவ. 14) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் ஆகியோரிடம் வாரியம் விசாரணையே நடத்தவில்லை என்றும், உண்மையை மறைப்பதற்கான 'கவர்-அப்' நாடகத்தை வாரியம் நடத்தியதாகவும் அவர் சாடியுள்ளார்.

கவர்-அப் குற்றச்சாட்டு

டேவிட் வார்னரின் இன்ஸ்டாகிராம் பதிவு

தனது சமூக வலைதளப் பதிவில் வார்னர் குறிப்பிடுகையில், "எனக்குத் தெரிந்தவரை, 2018-ஆம் ஆண்டு விசாரணையில் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் அல்லது நாதன் லயன் ஆகியோரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரிக்கவே இல்லை.

அது உண்மை எனில், பந்துவீச்சாளர்களுக்கு எதுவுமே தெரியாது என்ற கருத்தை வாரியம் எப்படித் தொடர்ந்து திணிக்க முடியும்.

ஆரம்பத்திலிருந்தே யாரைப் பலிகடா ஆக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்ப ஒரு மோசமான விசாரணையை நடத்தி, இப்போது பந்துவீச்சாளர்களுக்கு எதுவும் தெரியாது என்ற பொய்யான கதையைத் தக்கவைக்கப் பார்க்கிறார்கள்.

இது அப்பட்டமான மூடிமறைப்பு வேலை போல் நாற்றமடிக்கிறது" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

கம்மின்ஸ் - ஸ்டார்க் மறுப்பு

உஸ்மான் கவாஜாவின் புத்தகம்

முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா அண்மையில் வெளியிட்ட தனது சுயசரிதையான 'சபர்' (Sabr) புத்தகத்தில், பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் குறித்துத் தண்டிக்கப்பட்ட மூன்று வீரர்களைத் தாண்டி ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டதே இந்தப் புதிய புயலுக்குக் காரணமாக அமைந்தது.

இதற்குப் பதிலளித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ், கவாஜாவின் குற்றச்சாட்டை "100 சதவீதம் தவறானது மற்றும் அபத்தமானது" என மறுத்த நிலையில், வார்னர் கவாஜாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்.

மறுபுறம், வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், கேப்டவுன் மைதானத்தின் பெரிய திரையில் பார்த்த பிறகே பந்து சேதப்படுத்தப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியவந்தது என்ற 2021-ஆம் ஆண்டு நிலைப்பாட்டிலேயே தாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

மீண்டும் விசாரணைக்கு வாய்ப்பில்லை 

2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நியூலேண்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பந்தை உப்புத்தாள் (Sandpaper) கொண்டு சேதப்படுத்திய வழக்கில், திட்டத்தை வகுத்ததற்காக டேவிட் வார்னருக்கும், அதைத் தடுக்கத் தவறியதற்காக அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் தலா 12 மாதங்களும், பந்தைச் சேதப்படுத்திய கேமரூன் பான்கிராப்டிற்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது இந்த விவகாரத்தில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களிடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள போதிலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பெர்க், இந்த விசாரணையை மீண்டும் தொடங்க எந்த முகாந்திரமும் இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ADVERTISEMENT