ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவராக டேவிட் வார்னர் நியமனம் என தகவல்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை டேவிட் வார்னர் வழிநடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரமான கார் விபத்தில் இருந்து தப்பிய பின்னர் சீசனில் இருந்து நீக்கப்பட்ட ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக உள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், வார்னர் ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான பேட்டர்களில் ஒருவராகவும், தலைமைத்துவ அனுபவத்தையும் கொண்டுள்ளார். 2016 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணி பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அவர் ஐபிஎல்லில் அதிக ரன் குவித்தவர் என்பதால், அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்க டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல்லில் டேவிட் வார்னர் புள்ளி விபரங்கள்
அவர் தற்போது 162 ஐபிஎல் போட்டிகளில் 42.01 சராசரியில் 5,881 ரன்கள் எடுத்துள்ளார். நான்கு சதங்கள் அடித்துள்ள நிலையில், 55 அரைசதங்கள் அடித்து, போட்டியில் அதிக அரைசதங்கள் அடித்தவர் என்ற சாதனையை வார்னர் தக்கவைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, வார்னர் ஐபிஎல்லில் 69 போட்டிகளில் கேப்டனாக இருந்து 35 வெற்றி மற்றும் 32 தோல்விகளையும் பெற்றுள்ளார். இரண்டு போட்டிகளில் முடிவில்லை. ஐபிஎல்லில் வார்னர் கேப்டனாக 47.33 சராசரியில் 142.28 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,840 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு சதம் மற்றும் 26 அரைசதம் அடங்கும். மேலும் மூன்று ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.