ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள்; ஸ்டீவ் வாக்கின் சாதனையை முறியடித்தார் டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த பேட்டர் டேவிட் வார்னர் தற்போது அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆனார். 37 வயதான அவர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பாக்சிங் டே டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த போட்டியில் களமிறங்கும் முன் அவருக்கு இந்த சாதனையை படைக்க, வெறும் 20 மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 38 ரன்கள் எடுத்து சாதனை படைத்து ஆட்டமிழந்தார். முன்னதாக, இரண்டாவது இடத்தில் ஸ்டீவ் வாக் 18,496 ரன்களுடன் இருந்த நிலையில், அவரை டேவிட் வார்னர் பின்னுக்குத் தள்ளி 18,515 ரன்களை எடுத்துள்ளார். 27,368 ரன்களுடன் யாரும் எட்ட முடியாத உயரத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டேவிட் வார்னரின் முழு புள்ளிவிபரம்
தனது 111வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் டேவிட் வார்னர் 44.78 சராசரியில் 8,689 ரன்கள் குவித்துள்ளார். இதில் 26 சதங்கள் மற்றும் 36 அரைசதங்கள் அடங்கும். ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்காக ஐந்தாவது அதிக ரன்களை எடுத்தவராக டேவிட் வார்னர் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடருடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் வார்னர் 161 போட்டிகளில் 45.30 சராசரியில் 6,932 ரன்கள் குவித்துள்ளார். இதில் 22 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் அடங்கும். 99 டி20 போட்டிகளில் விளையாடி 32.88 சராசரியுடன் 2,894 ரன்களுடன் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்களை எடுத்த வீரர்களில் இரண்டாவது வீரராகவும் அவர் உள்ளார்.