பிக் பாஷ் லீக் முடிந்தவுடன் ஓய்வு! கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் அறிவிப்பு!!
39 வயதான ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் டான் கிறிஸ்டியன் தற்போது நடந்து வரும் பிக் பாஷ் லீக் 2022-23 சீசனுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக கிறிஸ்டியன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நேற்று பயிற்சியின்போது, எனது சிட்னி சிக்சர்ஸ் அணி வீரர்களிடம், பிபிஎல் சீசன் முடிந்தவுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறினேன்." என்று பதிவிட்டுள்ளார். அவர் மேலும், "நான் சிறுவயதில் கனவில் மட்டுமே காணக்கூடிய விஷயங்களைச் சாதித்து சில நினைவுகளை உருவாக்கி வைத்துள்ளேன்." என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
டான் கிறிஸ்டியன் ட்வீட்
டான் கிறிஸ்டியன் புள்ளி விபரங்கள்
பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடும் கிறிஸ்டியன், மொத்தமாக 405 டி20 போட்டிகளில் விளையாடி 5,809 ரன்களை குவித்துள்ளதோடு, 280 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். பிக்பாஷ் லீக் வரலாற்றில் 2,000-க்கும் அதிகமான ரன்கள் (2,082) மற்றும் 90-க்கும் அதிகமான விக்கெட்டுகளை (93) எடுத்த ஒரே வீரர் கிறிஸ்டியன் மட்டுமே என்பது இவரது தனிப்பட்ட சாதனையாகும். சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்காக கிறிஸ்டியன் 20 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் பங்கேற்றார். அதில் டி20 போட்டிகளில் 118 ரன்கள் குவித்ததோடு 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, 273 ரன்கள் குவித்ததோடு 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.