Loading...
காமன்வெல்த் 2026: ஒரே போட்டியில் 2 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! தமிழக வீரர்கள் சாதனை
ட்ரிபிள் ஜம்பில் பிரவீன், செல்வ பிரபு வரலாற்றுச் சாதனை

காமன்வெல்த் 2026: ஒரே போட்டியில் 2 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! தமிழக வீரர்கள் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2026
07:13 pm

செய்தி முன்னோட்டம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மிக விமரிசையாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் தடகள வீரர்கள் மீண்டும் ஒருமுறை தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் இறுதிப் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கத்தையும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கத்தையும் ஒரே நேரத்தில் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டைப் பதக்க சாதனையை படைத்துள்ளனர். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியத் தடகளத் துறையின் பலம் மீண்டும் உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரவீன் சித்திரவேல்

தோல்வியிலிருந்து மீண்டு வந்த பிரவீன் சித்திரவேல்

கடந்த 2022 பிர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் மிகக் குறைந்த இடைவெளியில் வெண்கலப் பதக்கத்தை இழந்து 4வது இடத்தைப் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், இம்முறை தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

இப்போட்டியில் தனது 4வது முயற்சியில் 16.58 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதன் மூலம் கடந்த முறை கைநழுவிய பதக்கத்திற்குப் பதிலாக வெள்ளிப் பதக்கம் வென்று, காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் தனது முந்தைய தோல்வியை மாபெரும் சாதனையாக மாற்றி மீட்டெடுத்துள்ளார்.

செல்வ பிரபு

வெண்கலம் வென்று அசத்திய இளம்வீரர் செல்வ பிரபு

அதேபோல மற்றொரு இந்திய இளம் தடகள வீரரான செல்வ பிரபு திருமாறன் தனது 5வது முயற்சியில் 16.52 மீட்டர் தூரம் தாண்டி 3வது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றினார்.

நியூசிலாந்தின் ஈதன் ஆலிவரை விட வெறும் 2 சென்டிமீட்டர் கூடுதல் தூரம் தாண்டி, தனது சர்வதேசப் போட்டித் தொடரின் முதல் பெரிய பதக்கத்தைச் செல்வா பிரபு வென்றுள்ளார்.

இப்போட்டியில் ஜமைக்கா நாட்டின் முன்னணி வீரரான ஜோர்டான் ஸ்காட் 16.72 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தங்கம்

குத்துச்சண்டை மற்றும் குண்டு எறிதலிலும் தங்கம்

இதே நாளில் நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவின் பிரீதி பவார் (54 கிலோ) மற்றும் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ) ஆகிய இரு வீராங்கனைகளும் தங்களது பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.

மேலும் பாரா தடகளப் பிரிவில், ஆண்களுக்கான குண்டு எறிதல் எஃப்57 போட்டியில் சோமன் ராணா 13.40 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கமும், சுபம் ஜூயல் 13.28 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

தடகளம் மற்றும் குத்துச்சண்டையில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT