வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமையன்று (அக்டோபர் 14) அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக பங்கேற்காத நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அகமதாபாத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். முன்னதாக, சென்னையில் ஆஸ்திரேலியாவுடனான போட்டிக்கு முன்னதாக அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கேயே சிகிச்சை வழங்கப்பட்டது. இதையடுத்து அணியுடன் டெல்லியில் நடந்த ஆப்கானிஸ்தான் போட்டிக்கு செல்லாமல், நேரடியாக அகமதாபாத் சென்றுள்ளார். இதற்கிடையே, ஒருபுறம் கில் வலைப்பயிற்சியில் ஈடுபடுவது நம்பிக்கையைக் கொடுத்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளதாக அணிக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்திய அணியில் ஷுப்மன் கில்லின் முக்கியத்துவம்
குறிப்பிடத்தக்க வகையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஃபார்மில் உள்ளார். அவர் 2023இல் ஒருநாள் கிரிக்கெட்டில் 20 இன்னிங்ஸில் 72.35 சராசரியில் 5 சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் 1,230 ரன்கள் குவித்து, இந்திய அணிக்காக அதிக ரன் குவித்தவராக உள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் நியூசிலாந்துக்கு எதிராக 149 பந்துகளில் 208 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த எட்டாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அணியில் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டின் போட்டி நீளத்தை கருத்தில் கொண்டு, அவர் முழுமையாக குணமடையும் வரை காத்திருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.