ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி குவாலிஃபையர் 1: மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்?
ஐபிஎல் 2023 சீசனின் குவாலிஃபையர் 1 ல், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 23) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடுகிறது. இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டி, ஐபிஎல் 2023 இன் முதல் இறுதிப் போட்டியாளரைத் தீர்மானிக்கும். இந்நிலையில், போட்டிக்கு மழையால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்குவெதரின் கணிப்பின்படி, சென்னையில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்பில்லை. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முழு போட்டியையும் காண முடியும்.
மழை பெய்தால் யாருக்கு வெற்றி வாய்ப்பு
ஐபிஎல் 2023இன் அதிகாரப்பூர்வ விதிகளின்படி, இறுதிப் போட்டி, எலிமினேட்டர், குவாலிஃபையர் 1 அல்லது குவாலிஃபையர் 2 போட்டிகள் சமன் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தாலோ, பின்வரும் விதி பொருந்தும். சம்பந்தப்பட்ட அணிகள் ஒரு சூப்பர் ஓவரில் போட்டியிடும் மற்றும் தேவைப்பட்டால் மேலும் சூப்பர் ஓவர்கள் நடத்தப்பட்டு போட்டியின் வெற்றியாளராக இருக்கும் அணியை தீர்மானிக்க வேண்டும். வெற்றியாளரைத் தீர்மானிக்க உரிய நேரத்திற்குள் சூப்பர் ஓவரையோ அல்லது அடுத்தடுத்த சூப்பர் ஓவர்களையோ நடத்த வாய்ப்பில்லாத சூழலில், லீக் அட்டவணையில் உயர்ந்த நிலையில் உள்ள அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும். அதாவது, இந்த ஆட்டம் மழையால் ரத்தானால் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால் அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.