'தல' தோனி ஐபிஎல் 2026-ல் விளையாடுவாரா? ரசிகர்களின் கேள்விக்கு சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி பதில்
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த ஊகங்களுக்கு, அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்வில், தோனியின் ஓய்வு குறித்து ஒரு குழந்தை எழுப்பிய கேள்விக்கு காசி விஸ்வநாதன் அளித்த பதில், சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. "தோனி ஓய்வு பெறுகிறாரா?" என்று அந்தக் குழந்தை கேட்டபோது, CSK CEO காசி விஸ்வநாதன், "இல்லை, அவர் இந்த ஐபிஎல் தொடருக்கு ஓய்வு பெறவில்லை" என்று உறுதியாகப் பதிலளித்தார். இதன் மூலம், 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு
தோனியின் கருத்து என்ன?
முன்னதாக, 2025 ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, தோனி தனது ஓய்வு குறித்துப் பேசியிருந்தார். "முடிவெடுக்க எனக்கு இன்னும் நான்கு ஐந்து மாதங்கள் உள்ளன. அவசரம் இல்லை. நான் முடித்துவிட்டேன் என்றும் சொல்லவில்லை, அதே நேரத்தில் திரும்பி வரப்போகிறேன் என்றும் சொல்லவில்லை". "முடிவெடுக்க வேண்டிய சுதந்திரமும் கால அவகாசமும் எனக்கு வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், 15% கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. உடலை தகுதியுடன் வைத்திருக்க வேண்டும். இது உயர்மட்ட கிரிக்கெட்," என்று அவர் கூறியிருந்தார். தோனி எப்போதும் போல, கடைசி நிமிடத்தில் தான் தனது முடிவுகளை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது சிஎஸ்கே நிர்வாகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.