மகன் ரொனால்டோ ஜூனியருடன் 2030 ஃபிஃபா உலகக்கோப்பையில்? கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வை அறிவிக்காததன் பின்னணி
செய்தி முன்னோட்டம்
போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 45வது வயதில், வரவிருக்கும் 2030 ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தனது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியருடன் இணைந்து விளையாட வாய்ப்புள்ளதாக சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. 2026 உலகக்கோப்பையே தனது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் எனக் கூறப்பட்ட போதிலும், ரொனால்டோ தனது ஓய்வு குறித்து இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் 2030 உலகக்கோப்பையில் மகனுடன் அவர் பங்கேற்பார் எனும் ஊகங்களை கிளப்ப காரணமாக அமைந்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
45 வயது
45 வயது வரை விளையாட முடியும் என முன்னாள் வீரர் கணிப்பு
ரொனால்டோவின் இந்த அபார உடல்தகுதி குறித்துப் பேசிய அவரது முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் சக வீரர் எரிக் ஜெம்பா-ஜெம்பா, ரொனால்டோவால் 44 அல்லது 45 வயது வரை தாராளமாக விளையாட முடியும் என தெரிவித்துள்ளார்.
"அவருக்கு 17 வயதாக இருக்கும் போதிருந்தே நான் அவரை நன்கறிவேன். பயிற்சிகள் முடிந்த பிறகும் அவர் ஓயாமல் உழைப்பார்.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட இத்தகைய மனஉறுதியை நான் வேறு எந்த வீரரிடமும் கண்டதில்லை" என ஜெம்பா புகழாரம் சூட்டியுள்ளார்.
மகன்
மகனுடன் இணைந்து விளையாடும் வரலாற்றுத் தருணம்
2030 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரானது போர்ச்சுகல், மொராக்கோ மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறவுள்ளது.
தற்போது அல் நாசர் கால்பந்து அகாடமியில் திறம்படப் பயிற்சி பெற்று வரும் ரொனால்டோவின் மகன் கிறிஸ்டியானோ ஜூனியர், விரைவில் தனது தந்தையுடன் சர்வதேச போட்டியில் இணையவுள்ளார்.
சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையில் மகனுடன் ரொனால்டோ களம் இறங்குவது அவரது கால்பந்து வரலாற்றுக்கே ஒரு மிகச்சிறந்த கனவு முடிவாக அமையும்.
2025-26 சீசன்
2025-26 சீசனில் ரொனால்டோவின் அபார சாதனை
2026 உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி கோப்பையை வெல்லத் தவறிய போதிலும், 2025-2026 சீசனில் ரொனால்டோ அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து 35 கோல்களை அடித்து அசத்தலான ஃபார்மில் இருந்தார்.
2030 உலகக்கோப்பை வரை அவர் தீவிர ஆட்டத்தில் நீடித்தால், போர்ச்சுகல் உலகக்கோப்பை அணியில் அவர் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என விளையாட்டு விமர்சகர்களும், அவரது தீவிர ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்து வருகின்றனர்.