துப்பாக்கிய புடிங்க வாஷி; தி கோட் பட பாணியில் வாஷிங்டன் சுந்தருக்கு அஸ்வின் வெளியிட்ட எக்ஸ் பதிவு
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தி கோட் பட டயலாக்கை மேற்கோள் காட்டி பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது. முன்னதாக, பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் அணியின் ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தார். இது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை பாராட்டி அறிக்கை வெளியிட்டனர். அந்த வகையில், அஸ்வினைப் போலவே தமிழகத்தைச் சேர்ந்தவருமான இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், அஸ்வினை தனது வழிகாட்டி எனக் கூறி இதயப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
வாஷிங்டன் சுந்தரின் அறிக்கை
வாஷிங்டன் சுந்தர் தனது அறிக்கையில் "வெறும் ஒரு அணி வீரராக மட்டும் இல்லை - ஆஷ் அண்ணா, நீங்கள் ஒரு உத்வேகம், வழிகாட்டி மற்றும் விளையாட்டின் உண்மையான சாம்பியனாக இருந்தீர்கள். உங்களுடன் களத்தையும் டிரஸ்ஸிங் ரூமையும் பகிர்ந்து கொண்டது ஒரு பாக்கியம். தமிழகத்தின் அதே மாநிலத்திலிருந்து வந்த நான், சேப்பாக்கத்தின் நெருங்கிய மூலைகளில் இருந்து, உங்களுக்கு எதிராகவும், உங்களுடன் சேர்ந்து விளையாடுவதையும் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அந்த ஒவ்வொரு நொடியும் முக்கியத்துவமானது. களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் கற்றுக் கொண்டதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். உங்களின் அடுத்தடுத்த செயல்பாடுகள் வெற்றியடையவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்புகிறேன்." என்று கூறினார்.
தி கோட் பாணியில் பதிலளித்த அஸ்வின்
வாஷிங்டன் சுந்தர் தனது அறிக்கையை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில், அதை பகிர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், "துப்பாக்கிய புடிங்க வாஷி! அன்று இரவு நீங்கள் கெட் டுகெதரில் பேசிய 2 நிமிடம் சிறப்பாக இருந்தது." என கோட் செய்து பதிலளித்துள்ளார். தி கோட் படத்தின் கிளைமேக்ஸ் சீனில் விஜய் சிவகார்த்திகேயனிடம் கூறிய டயலாக்கை மாற்றி அஸ்வின் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அஸ்வின் தனக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் வருவார் என்பதை கூறும் விதமாக இந்த பதில் அமைந்துள்ளது என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.