பார்டர் கவாஸ்கர் டிராபியில் பிலிப் ஹியூஸிற்கு 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி; ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மறைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் 10 வது ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் தொடர் செயல்பாடுகளை அறிவித்துள்ளது. 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் இடது கை பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ், ஒரு உள்நாட்டுப் போட்டியின் போது பவுன்சரால் தாக்கப்பட்டு நவம்பர் 27, 2014 அன்று காலமானார். அவரை ஒவ்வோர் ஆண்டும் நினைவுகூர்ந்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்த ஆண்டு டிசம்பர் 6-10 வரை திட்டமிடப்பட்ட அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு சிறப்பு நினைவஞ்சலி செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
வீரர்கள் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடுவார்கள்
கூடுதலாக, மூன்று ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கறுப்புப் பட்டை அணிவார்கள், மேலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். ஒவ்வொரு ஆட்டத்தின் நான்காவது நாளிலும் ஒரு கணம் மௌனம் கடைபிடிக்கப்படும். தெற்கு ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிலிப் ஹியூஸ், ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அவரது இடது காதுக்கு கீழே பாதுகாப்பற்ற பகுதியில் தாக்கப்பட்டார். உடனடியாக சரிந்து விழுந்த அவருக்கு அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை இருந்தபோதிலும், அவரது 26 வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு காயத்தால் இறந்தார். இரண்டு வாரங்கள் நடக்கும் நினைவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக பிலிப் ஹியூஸ் பற்றிய ஒரு சிறப்பு ஆவணப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.