Loading...
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: அக்டோபர் 29-ல் முதல்வர் விஜய் தலைமையில் பரிசளிப்பு விழா
முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு விழா அக்டோபர் 29-ல் நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: அக்டோபர் 29-ல் முதல்வர் விஜய் தலைமையில் பரிசளிப்பு விழா

எழுதியவர் Vasuki
Oct 27, 2026
05:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான பிரம்மாண்ட பரிசளிப்பு விழா வரும் அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கும் வீரர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

முன்னிலை

36,000 வீரர்கள் பங்கேற்பு

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டன.

சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் ஆகிய முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டிகள் அக்டோபர் 28-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.

மொத்தம் 36,000 விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய இந்த மாநில அளவிலான போட்டிகளில், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திப் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

பரிசு

சர்வதேச அளவில் சாதித்த தமிழக வீரர்களுக்கும் பரிசு

இதனிடையே, முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளில் முத்திரை பதித்த வீரர்களுக்குப் பரிசளிப்பதோடு மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்று தாயகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் இவ்விழாவில் முதலமைச்சர் விஜய் உயரிய ரொக்கப் பரிசுகளை வழங்கிப் பாராட்டவுள்ளார்.

விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் நேரு உள் விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா தமிழக விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT