INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை: சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக தயாராகும் சேப்பாக்கம் மைதானம்
ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த போட்டியின்போது, உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மற்ற எல்லா அணிகளும் குறைந்தது ஒரு போட்டியையாவது விளையாடியிருக்கும். இந்திய அணி கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வெல்ல முடியாத நிலையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை மூலம் ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் சுழற்பந்து வீச்சுக்கு எதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள்
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அஸ்வின் ரவிச்சந்திரன், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இந்திய மைதானங்கள் எப்போதும் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்த மைதானமும் அதற்கு ஏற்றார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை ஆஸ்திரேலிய அணியும் உயர்ந்துள்ளதால், அவர்கள் தங்கள் வலைப்பயிற்சியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) அதிக நேரம் சுழற்பந்துக்கு எதிராக தங்கள் திறமைகளை மெருகூட்டும் பயிற்சியை மேற்கொண்டனர். மூத்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் உள்ளூர் பந்துவீச்சாளர்களை கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.