ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : கடைசி பந்துவரை திக்திக்! குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை கைப்பற்றியது சிஎஸ்கே!
செவ்வாய்க்கிழமை (மே 30) அதிகாலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுகிழமை (மே 28) திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அன்று கனமழை பெய்ததால் போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சனின் அபார ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் குவித்தது.
மழையால் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தாமதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை பெய்ய ஆரம்பித்ததால் போட்டி தடைபட்டது. இந்நிலையில் 12.10 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்த நிலையில், கடைசி 2 பந்துகளில் ஜடேஜா 5வது பந்தில் சிக்சரையும், ஆறாவது பந்தில் பவுண்டரியையும் அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இதன் மூலம் ஐபிஎல்லில் தனது ஐந்தாவது பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்லில் அதிக பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன் செய்தது.