2024க்கு பிறகும் ஐபிஎல்லில் எம்எஸ் தோனி? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில்
ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மினி ஏலம் முடிந்து அனைத்து அணிகளும் வரவிருக்கும் சீசனுக்கு தயாராகி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியைப் பொறுத்தவரை எம்எஸ் தோனி 2024 ஆம் ஆண்டிலும் அணியில் விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டாலும், வரவிருக்கும் சீசன் முடிந்த பிறகும் அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவிலை. இந்நிலையில், ரசிகர்களிடையே இது குறித்த ஆர்வத்தை அப்படியே தக்கவைத்து, சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், இது அவரது கடைசி சீசனாக இருக்குமா என்பதை தோனியால் மட்டுமே சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
காசி விஸ்வநாதன் கூறியதன் முழு விபரம்
எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என கேட்டதற்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், "அது எனக்குத் தெரியாது. கேப்டனைப் பொறுத்த வரையில் அவர் உங்களுக்கு இது குறித்து நேரடியாகப் பதிலளிப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் எங்களிடம் கூறவில்லை" என்று தெரிவித்தார். முன்னதாக, இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையொட்டி, அவரது உடற்தகுதி குறித்த கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், "அவர் இப்போது நன்றாக இருக்கிறார். இன்னும் 10 நாட்களில் அவர் வலைப்பயிற்சியை தொடங்குவார்." என்று கூறினார்.