INDvsAUS நான்காவது டெஸ்ட் : சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார் கேமரூன் கிரீன்
அகமதாபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. 170/4 என்ற ஸ்கோர்கார்டுடன் ஆஸ்திரேலியா இருந்த நிலையில், ஆறாவது இடத்தில் கேமரூன் கிரீன் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் கிரீன் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், இரண்டாம் நாளில் சதமடித்து 114 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கட்டில் இது கேமரூனுக்கு முதல் சதமாகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 900 ரன்களை கடந்த கேமரூன்
தனது 20வது டெஸ்டில் விளையாடி வரும் கேமரூன், தனது முதல் சாதத்தை பதிவு செய்ததோடு, 35க்கும் அதிகமான சராசரியில் 900 ரன்களைக் கடந்துள்ளார். ஒரு சதம் தவிர, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு அரைசதங்களையும் அடித்துள்ளார். இன்று இந்தியாவுக்கு எதிராக சதமடித்த நிலையில், அவரது முந்தைய அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 84'ஐயும் இந்தியாவுக்கு எதிராகதான் எடுத்திருந்தார். ஒட்டுமொத்தமாக, அவர் இந்தியாவுக்கு எதிரான ஆறு டெஸ்டில் 350க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். முன்னதாக காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால், இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கேமரூன் கிரீன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.