பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் லக்ஷ்யா சென், பிரணாய் எச்.எஸ். 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பதினொன்றாம் நிலை வீரரான லக்ஷ்யா சென் 2023 BWF உலக சாம்பியன்ஷிப்பில் மொரீஷியஸின் ஜார்ஜஸ் ஜூலியன் பாலை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். திங்களன்று நடந்த இந்த போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் வெறும் 25 நிமிடங்களில் 21-12, 21-7 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற லக்ஷ்யா சென், BWF உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார். முன்னதாக, 2021 இல் வெண்கலப் பதக்கம் வென்ற இளம் வீரர் லக்ஷ்யா சென், இந்த ஆண்டு நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், சமீபத்தில் மீண்டு வந்துள்ளார்.
பிரணாய் எச்எஸ் இரண்டாவது சுற்றுக்கு தகுதி
முன்னதாக, உலக சாம்பியன்ஷிப்பில் மற்றொரு இந்தியரான பிரணாய் எச்.எஸ். தனது தொடக்கச் சுற்றிலும் இதே பாணியில் வெற்றி பெற்றார். பின்லாந்தின் காலே கோல்ஜோனனை எதிர்கொண்ட பிரணாய் 24-22, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டிக்கு முன், பிரணாய் மற்றும் கோல்ஜோனன் இருவரும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில், அனைத்திலும் பிரணாய் எச்.எஸ். வெற்றி பெற்றுள்ளார். இன்று நடக்க உள்ள மற்றொரு போட்டியில் மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பானின் கெண்டா நிஷிமோட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.