Loading...
இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஓ'ரூர்க் விலகல்
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ'ரூர்க் விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஓ'ரூர்க் விலகல்

எழுதியவர் Vasuki
Oct 10, 2026
02:35 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள அனைத்து வடிவப் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவ்வணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான வில்லியம் ஓ'ரூர்க் (William O'Rourke), தொடை மற்றும் கெண்டைக்கால் தசைநார் காயங்களிலிருந்து முழுமையாகக் குணமடையாத காரணத்தினால் இத்தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அவருக்கு இந்தக் காயங்கள் ஏற்பட்டன. வரும் டிசம்பர் 9 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடங்கவுள்ள 4 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு, அவருக்கு முழு ஓய்வு அளிக்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஏமாற்றம்

தொடரும் காயங்களின் தாக்கம்

வில்லியம் ஓ'ரூர்க் கடந்த ஓராண்டாகவே தொடர் காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் முதுகெலும்பு முறிவு காரணமாக 7 மாதங்கள் விளையாடாமல் இருந்த அவர், பின்னர் ஏப்ரல் மாதம் அணிக்குத் திரும்பினார்.

வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக விளையாடிய அவருக்கு மீண்டும் தசைநார் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்துப் பேசிய நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர், "இந்தியாவுக்கு எதிரான முக்கியத் தொடரில் வில் விளையாட முடியாமல் போவது ஏமாற்றமளிக்கிறது.

"அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் களமிறங்கவிருந்தார். ஆனால், அவரது பந்துவீச்சு திறனை முழுமையாக மீட்டெடுக்க கூடுதல் அவகாசம் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தவிக்கும் நியூசிலாந்து

இந்திய பேட்டர்களை அச்சுறுத்திய பந்துவீச்சாளர்

கடந்த 2024 இந்திய டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என வரலாற்று வெற்றி பெற முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ'ரூர்க்.

140 கி.மீ வேகத்தில் பந்துகளை எகிறச் செய்து இந்திய பேட்டர்களை அச்சுறுத்திய அவர், 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்தியத் தொடருக்கு முன்னதாக ரச்சின் ரவீந்திரா தோள்பட்டை காயம் காரணமாக ஏற்கெனவே விலகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஓ'ரூர்க்கும் காயம் காரணமாக விலகியிருப்பது, இந்தியத் தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுத் துறைக்குப் பெரும் பின்னடைவாகவும் கடுமையான சவாலாகவும் மாறியுள்ளது.

ADVERTISEMENT