பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் கேப்டன் இவர்தான்; பயிற்சியாளர் கௌதம் காம்பிர் அறிவிப்பு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணி முன்கூட்டியே கிளம்பும் நிலையில், திங்கட்கிழமை (நவம்பர் 11) அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் ரோஹித் ஷர்மா தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை என்றால், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும் துணை கேப்டனுமான ஜஸ்ப்ரீத் பும்ரா அணியை வழிநடத்துவார் என்று உறுதிபடுத்தியுள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.
முதல் போட்டியில் கேஎல் ராகுலை களமிறக்க திட்டம்
பத்திரிகையாளர் சந்திப்பில் கேஎல் ராகுல் குறித்து பேசிய கவுதம் காம்பிர், ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில், முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக கேஎல் ராகுலை களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.