பார்டர் கவாஸ்கர் டிராபி: முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோர்; ஆஸ்திரேலியாவில் மோசமான சாதனை படைத்தது இந்திய அணி
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் டக்கவுட் ஆகி வெளியேறினர். கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்த நிலையில், விராட் கோலி 5 ரன்களில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 36 ரன்களும், நிதிஷ் ரெட்டி 41 ரன்களும் எடுத்ததன் மூலம் மூன்று இலக்க ஸ்கோரை இந்தியா எட்டியது.
மோசமான சாதனையின் பின்னணி
முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதன் மூலம், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் குறைந்த பட்ச ஸ்கோர் என்ற தனது முந்தைய மோசமான சாதனையை சமன் செய்துள்ளது. இதற்கு முன்னர், 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த போட்டியில் இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. அந்த போட்டியில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதற்கிடையே, தற்போது போட்டி நடந்து வரும் பெர்த் மைதானத்தில், 2012இல் எடுத்த 161 ரன்களே முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோராக இருந்த நிலையில், அதை தற்போதைய 150/10 பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதிலும், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.