ஐபிஎல் 2023 : பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்? கவலையில் சிஎஸ்கே!
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் இறுதிக் கட்டத்தில் விளையாட மாட்டார் எனும் தகவல் வெளியாகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே'வால் ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டார். தோனி ஓய்வு பெற்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2023 சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28 வரை நடக்கிறது. ஆனால் அயர்லாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 1ஆம் தேதி தொடங்குவதால், மே பாதியிலேயே அவர் கிளம்பி விடுவார் எனக் கூறப்படுகிறது.
வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக வலம் வரும் பென் ஸ்டோக்ஸ்
ஏப்ரல் 2022 இல் இங்கிலாந்து அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ், 11 போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்றுள்ளார். இந்த காலகட்டத்தில் வேறு எந்த அணியும் 6 டெஸ்ட் வெற்றிகளைக் கூட பெறவில்லை. மேலும் ஸ்டோக்ஸ் தலைமையில் பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் தொடரில் முதல் முறையாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானை கிளீன் ஸ்வீப் செய்தது (3-0). மேலும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் தொடரை வென்றனர். ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து கடந்த ஆண்டு 9 டெஸ்ட் வெற்றிகளைப் பதிவு செய்தது. இதன் மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் டெஸ்ட் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பெற்ற விராட் கோலியை (2016) சமன் செய்தார்.