எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இங்கிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 93 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் சதமடித்தாலும், இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்ட் ஆட்டம் வெற்றியை பென் ஸ்டோக்ஸ் அணியின் பக்கம் திருப்பியது.
250 பிளஸ் இலக்குகளை அதிக முறை சேஸ் செய்த கேப்டன்
251 ரன்கள் இலக்கை 3 விக்கெட் கைவசம் இருக்க எட்டியதன் மூலம் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார். முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் 250க்கும் மேல் இலக்குகளை அதிக முறை சேஸ் செய்த கேப்டன்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், தற்போது ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் 251 ரன்கள் இலக்கை எட்டியதன் மூலம் 5 முறை 250க்கும் மேற்பட்ட இலக்கை எட்டி பென் ஸ்டோக்ஸ் தோனியின் சாதனையை முறியடித்தார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாரா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலா 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.