சையது முஸ்தாக் அலி கோப்பைத் தொடரின் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது பிசிசிஐ
பிசிசிஐ-யின் ஏபெக்ஸ் கவுன்சிஸ் சந்திப்பு நேற்று(ஜூலை-7) மும்பையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சையது முஸ்தாக் அலி தொடரில் பின்பற்றப்படும் புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ. இந்தியாவின் உள்நாட்டு டி20 தொடரான சையது முஸ்தாக் அலி கோப்பைத் (SMAT) தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர்-6ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதனைத தொடர்ந்து, தொடரின் விதிமுறைகளில் மூன்று முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது பிசிசிஐ. மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பவிருக்கும் இந்திய அணி குறித்த முடிவுகளும் இந்த சந்திப்பில் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில், இந்த வருட ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, முதல் நிலை பெண்கள் அணியையும், இரண்டாம் நிலை ஆண்கள் அணியையும் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சையது முஸ்தாக் அலி கோப்பைத் தொடரின் விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
இதுவரை SMAT தொடரில், ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேட்/பாலுக்கு இடையேயான போட்டியை சமமாக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கடந்த SMAT தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை அறிமுகம் செய்யப்பட்ட போது, ஒரு இன்னிங்ஸின் 14-வது ஓவருக்கு முன்பே இம்பேக்ட் பிளேயர் களமிறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது, கடந்த ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட்டதைப் போல, போட்டியின் எந்த நிலையில் வேண்டுமானாலும் இம்பேக்ட் பிளேயரை அறிமுகம் செய்து கொள்ளலாம் என மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, டாஸ் போடப்படும் முன்பே பிளேயிங் 11 பட்டியலை அணிகள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.