BCCI-யின் துரித நடவடிக்கையால் ஷ்ரேயாஸ் ஐயர் உயிர் காப்பாற்றப்பட்டது: தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது காயம் அடைந்து, சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். அவர் ஆபத்தான கட்டத்தைக் கடந்துவிட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து (ICU) சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் News18 செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அலெக்ஸ் கேரியின் கேட்ச்சை பிடித்தபோது, அவர் இடது பக்க விலா எலும்புப் பகுதியில் பலமாக விழுந்து காயம் அடைந்தார். மைதானத்திலிருந்து ஓய்வறைக்கு திரும்பிய பின், அவரது உயிர் காக்கும் முக்கியப் பரிசோதனைகளின் அளவு (Vital Parameters) கவலை அளிக்கும் வகையில் குறைந்ததால், உடனடியாக அவர் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விவரங்கள்
காயம் குறித்த விவரங்கள்
மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு மண்ணீரலில் (Spleen) கிழிசல் ஏற்பட்டிருப்பதும், அதன் விளைவாக உள் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. உள் இரத்தக்கசிவு காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. "இந்த காயம் உயிருக்கே ஆபத்தை விளைவித்திருக்கலாம்" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிசிசிஐ மருத்துவக் குழுவின் உடனடி நடவடிக்கையால் அவர் அபாயத்திலிருந்து மீட்கப்பட்டார். பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது மருத்துவ ரீதியாக stable நிலையில் உள்ளார், மேலும் நன்கு குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலை "நிலைத்தன்மை அடைந்திருந்தாலும், இன்னும் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரித நடவடிக்கை
BCCI-யின் துரித நடவடிக்கையால் காப்பாற்றப்பட்ட ஷ்ரேயாஸ்
பிசிசிஐ மருத்துவக் குழு, சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள சிறப்பு மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்திய அணியின் மருத்துவர் அவருடனேயே சிட்னியில் தங்கி, தினசரி முன்னேற்றங்களை கவனித்து வருகிறார். ஐயரின் மருத்துவ அறிக்கைகள் ஐ.சி.சி மருத்துவக் குழு, பிசிசிஐ மருத்துவக் குழு மற்றும் கோகிலாபென் திருபாய் அம்பானி விளையாட்டு மருத்துவ மையத்தின் தலைவரான டின்ஷா பர்திவாலாவுக்கு அனுப்பப்பட்டதாக டைனிக் ஜாக்ரன் தெரிவித்துள்ளது. மைதானத்தில் வாரியத்தின் மருத்துவ குழுவின் சரியான நேரத்தில் தலையீடு ஐயரின் உயிரைக் காப்பாற்றியதாக பிசிசிஐயிடம் பர்திவாலா கூறியதாக கூறப்படுகிறது.
அடுத்தகட்ட சிகிச்சை
அடுத்தகட்ட சிகிச்சை மற்றும் கிரிக்கெட்டிற்கு திரும்புவது
உள் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதால், ஷ்ரேயஸ் ஐயர் இன்னும் சில நாட்களுக்கு, அதாவது குறைந்தது ஒரு வாரம் சிட்னி மருத்துவமனையிலேயே மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். சிட்னிக்கு வந்து மகனைப் பார்க்க, ஷ்ரேயாஸ் ஐயரின் குடும்பத்தினர் அவசர விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தக் காயம் மூன்று வாரங்களில் குணமடையலாம் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மண்ணீரல் காயம் மற்றும் உள் இரத்தக்கசிவு காரணமாக அவர் முழுமையாகக் குணமடைய அதிக கால அவகாசம் தேவைப்படும். இதனால், அவர் வரவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தவறவிட வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.