50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ
2023-ம் ஆண்டிற்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது பிசிசிஐ. அந்த அட்டவணையில் தற்போது சில மாற்றங்களைச் செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்தியாவின் முக்கியமான போட்டியாகக் கருதப்படும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியானது முதலில் அக்டோபர் 15-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்தி மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, நடைபெறும் அன்று இந்தியாவில் நவராத்திரி பூஜையும் தொடங்குகிறது. எனவே, இந்தப் போட்டியை அதற்கு முந்தைய நாளான அக்டோபர் 14-ம் தேதி மாற்றி வைத்திருக்கிறது பிசிசிஐ. இந்த மாற்றத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
மாற்றம் செய்யப்பட்ட போட்டிகள்:
மேற்கூறிய இந்தியா-பாகிஸ்தான் போட்டி மட்டுமின்றி, மேலும் 8 போட்டிகளில் மாற்றம் செய்திருக்கிறது பிசிசிஐ. நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டியானது நவம்பர் 11-ல் இருந்து 12-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான்-இலங்கை இடையிலான போட்டி, அக்டோபர் 12-ல் இருந்து 10-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி அக்டோபர் 12-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. சென்னையில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் இடையிலான போட்டி பகலிரவுப் போட்டியாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 12-ம் தேதி நடைபெறவிருந்த, ஆஸ்திரேலியா-பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து-பாகிஸ்தான் ஆகிய இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பையிலும், இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெறவிருக்கின்றன.