LOADING...
விராட் கோலி, ரோஹித் ஷர்மா சம்பளத்தில் ₹2 கோடி குறைக்க BCCI திட்டம்?
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் சம்பளம் குறைக்க BCCI திட்டம்

விராட் கோலி, ரோஹித் ஷர்மா சம்பளத்தில் ₹2 கோடி குறைக்க BCCI திட்டம்?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 11, 2025
08:36 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்திய வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தங்களை (Central Contracts) திருத்தி அமைப்பது குறித்து டிசம்பர் 22 அன்று நடைபெறவுள்ள உச்ச கவுன்சிலின் ஆண்டு கூட்டத்தில் விவாதிக்க உள்ளது. இந்த கூட்டத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் சம்பளம் குறைக்கப்படலாம் என்றும், சுப்மன் கில்லுக்கு பதவி உயர்வு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. BCCI-யின் இந்த கூட்டத்தில் நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்களுக்கான ஊதிய கட்டமைப்பை திருத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் பெண் வீராங்கனைகளின் ஒப்பந்தங்களும் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பளம்

கோலி, ரோஹித் சம்பளம் குறைகிறதா?

இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதற்கு முந்தைய 2024-25 ஒப்பந்த சுழற்சியில், இருவரும் அதிக சம்பளம் பெறும் 'A+' பிரிவில், ஆண்டு ஊதியம் ₹7 கோடி என்ற சம்பளத்தில் தொடர்ந்து நீடித்தனர். தற்போது, இவர்கள் இருவரையும் 'A' பிரிவுக்கு(ஆண்டு ஊதியம் ₹5 கோடி) தரம் இறக்குவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த தரம் இறக்கம் நடந்தால், இருவருக்கும் ஒப்பந்த ஊதியத்தில் ₹2 கோடி குறையும்.

ஷுப்மன் கில்

ஷுப்மன் கில்லுக்கு பதவி உயர்வு

இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கேப்டனான ஷுப்மன் கில், தற்போது 'A' பிரிவில் உள்ளார். வரவிருக்கும் ஒப்பந்த சுழற்சியில், அவர் அதிகபட்ச சம்பளம் பெறும் 'A+' பிரிவுக்கு (₹7 கோடி) பதவி உயர்வு பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பதவி உயர்வு கிடைத்தால், அவர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களுடன் இணைந்து அதிக சம்பளம் பெறும் பிரிவில் இருப்பார்.

Advertisement