Loading...
காயங்களால் தொடர் பின்னடைவு! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை; இந்திய அணியின் முதன்மை ஃபிசியோ கம்லேஷ் ஜெயின் நீக்கம்
இந்திய அணியின் முதன்மை ஃபிசியோ கம்லேஷ் ஜெயின் நீக்கம்

காயங்களால் தொடர் பின்னடைவு! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை; இந்திய அணியின் முதன்மை ஃபிசியோ கம்லேஷ் ஜெயின் நீக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2026
02:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை உடற்பயிற்சி மருத்துவருக்கான (Physiotherapist) கம்லேஷ் ஜெயினின் ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடியாக ரத்து செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் ஆதரவு ஊழியராக பணியாற்றி வந்த இவர், நியூசிலாந்து தொடருக்குப் பிறகு அணியை விட்டு முற்றிலும் விலகவுள்ளார். முன்னணி வீரர்கள் பலர் தொடர்ச்சியாகக் காயமடைந்து தொடர்களில் இருந்து விலகி வருவது குறித்து பிசிசிஐ ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வு

தொடரும் வீரர்களின் காயம் மற்றும் மருத்துவ ஆய்வு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக அண்மையில் விலகினார்.

முன்னதாக ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் ரெட்டி போன்ற நட்சத்திர வீரர்களும் காயங்களால் அவதிப்பட்டனர்.

பும்ரா மற்றும் நிதிஷ் ரெட்டி மீண்டும் உடற்தகுதி பெற்று அணிக்குத் திரும்பிய போதிலும், தேசிய அணியின் மருத்துவ மேலாண்மை மற்றும் ஃபிசியோக்களின் பராமரிப்பு குறித்துப் பிசிசிஐ கவலை அடைந்திருந்தது.

ஐபிஎல்

ஐபிஎல் அணிகளில் இணைய வாய்ப்பு

முன்னதாக நிதின் படேலுக்குப் பதிலாக இந்திய அணியின் ஃபிசியோவாகப் பொறுப்பேற்ற கம்லேஷ் ஜெயின், தற்போது மூன்று மாத நோட்டீஸ் காலத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் பிசிசிஐ அமைப்பில் இருந்து முழுமையாக விலகிய பிறகு, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் உள்ள ஏதேனும் ஒரு முன்னணி அணியில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்திய அணியின் புதிய முதன்மை ஃபிசியோவை நியமிக்கும் பணிகளிலும் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.

ADVERTISEMENT

டி20 கிரிக்கெட்

டெல்லி டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

இதற்கிடையே, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி செப்டம்பர் 13 அன்று டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுவதால் போட்டியை ஒத்திவைக்க டெல்லி காவல்துறை கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் காவல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, போட்டிக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், போட்டிக்கான அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT