சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் செல்ல முடியாது; மீண்டும் உறுதி செய்தது பிசிசிஐ
8 வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர் பெற்றுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிபி) தங்கள் முடிவைத் தெரிவித்து விட்டது. பிசிசிஐ தங்களின் முடிவுக்கான காரணமாக, பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டியது மற்றும் அறிக்கையின்படி துபாயில் தங்கள் அனைத்து ஆட்டங்களையும் விளையாட விருப்பம் தெரிவித்தது. "எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி எங்கள் விளையாட்டுகளை துபாய்க்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டோம்." என்று பெயர் தெரியாத நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
ஹைபிரிட் மாடல் முறையில் போட்டி நடக்குமா?
கடைசியாக பாகிஸ்தான் நடத்திய மல்டி டோர்னமெண்ட் போட்டியானது 2023ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையாகும். இது ஹைப்ரிட் மாடலில் நடத்தப்பட்டது. இதில், இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டி உட்பட தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது. எவ்வாறாயினும், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்ற பிறகு, கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற பேச்சு மீண்டும் எழுந்தது. ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் தங்கள் அணி இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற யோசனையுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயை அணுகியதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், பிசிசிஐயும் இந்த விருப்பத்தை நிராகரித்துவிட்டதாகவும், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது.
பிசிசிஐ முடிவில் ஐசிசி தலையிடுமா?
பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்ததில் ஐசிசி தலையிட வாய்ப்பில்லை. ஏனெனில் அதன் அரசாங்கக் கொள்கைக்கு எதிராக எந்த வாரியத்தையும் கட்டாயப்படுத்த முடியாது. இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ள தற்காலிக அட்டவணையின்படி, பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி லாகூரில் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 19 அன்று தொடங்கி இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக அட்டவணையின்படி, பாதுகாப்பு மற்றும் தளவாட காரணங்களுக்காக இந்தியாவின் அனைத்து போட்டிகளும் லாகூரில் வைக்கப்பட்டுள்ளன.