LOADING...
ஐபிஎல் 2026: சொந்த மைதானங்கள் குறித்து ஜனவரி 27-க்குள் பதிலளிக்க RCB மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு உத்தரவு
ஜனவரி 27-ஆம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று BCCI கெடு விதித்துள்ளது

ஐபிஎல் 2026: சொந்த மைதானங்கள் குறித்து ஜனவரி 27-க்குள் பதிலளிக்க RCB மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
04:24 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களது சொந்த மைதானங்களில் போட்டிகளை நடத்துவது குறித்து வரும் ஜனவரி 27-ஆம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ(BCCI) கெடு விதித்துள்ளது.

கட்டுப்பாடு

RCB-க்கு அரசு விதித்த கிடுக்கிப்பிடி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த கர்நாடக அரசு சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மைதானத்தின் உள்ளே மட்டுமல்லாமல், வெளியேயும் உள்ள சாலைகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு ஆர்சிபி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. மேலும், டிஜே (DJ) இசைக்கு கட்டுப்பாடு மற்றும் மைதானத்தை சுற்றி தீயணைப்பு படை பிரிவை அமைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் இந்தச் செயல் தங்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக கருதும் RCB நிர்வாகம், இது குறித்து கர்நாடக கிரிக்கெட் சங்கத்துடன் (KSCA) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் நிலவரம்

மறுபுறம், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் (RCA) நிலவும் நிர்வாக சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தப்படாதது போன்ற காரணங்களால் ஜெய்ப்பூரில் போட்டிகள் நடப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஒருவேளை ஜனவரி 27-க்குள் இந்த இரு அணிகளும் தங்களது சொந்த மைதானங்களை உறுதி செய்யத் தவறினால், பிசிசிஐ மாற்று மைதானங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்தந்த அணி ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement