உயரம் தாண்டுதலில் இந்தியா வரலாற்று சாதனை! உலக யு20 சாம்பியன்ஷிப்பில் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்
செய்தி முன்னோட்டம்
உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய இளம் வீரர் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டித் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை சமன் செய்ததன் மூலம் இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். உலக யு20 தடகளப் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா பெறும் முதல் வெள்ளிப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி
Countback அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட பதக்கங்கள்
போட்டியின் முடிவில் அல்ஜீரியாவின் யூனஸ் அயாச்சி, இந்தியாவின் பஸாந்த் மற்றும் கிரேட் பிரிட்டனின் ஓடிஸ் பூல் ஆகிய மூவருமே 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டினர்.
இருப்பினும், அல்ஜீரிய வீரர் அயாச்சி தனது முதல் முயற்சியிலேயே 2.21 மீட்டரைக் கடந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்திய வீரர் பஸாந்த் தனது இரண்டாவது முயற்சியில் இந்த இலக்கை எட்டியதால் அவருக்கு வெள்ளிப் பதக்கமும், மூன்றாவது முயற்சியில் கடந்த பிரிட்டிஷ் வீரர் ஓடிஸ் பூலுக்கு வெண்கலப் பதக்கமும் Countback முறைப்படி வழங்கப்பட்டது.
செயல்திறன்
பஸாந்த் குமார் மேக்வாலின் சிறப்பான செயல்திறன்
இறுதிப் போட்டியில் களமிறங்கிய பஸாந்த், தனது முதல் முயற்சியில் 2.06 மீட்டர் உயரத்தையும், இரண்டாவது முயற்சியில் 2.12 மீட்டர் உயரத்தையும், முதல் முயற்சியிலேயே 2.17 மீட்டர் உயரத்தையும் எளிதாகக் கடந்தார்.
அதைத் தொடர்ந்து பார் 2.21 மீட்டராக உயர்த்தப்பட்ட போது, தனது இரண்டாவது முயற்சியில் அதைத் தாண்டி சாதனை படைத்தார்.
இவரது இந்தத் திறமையான ஆட்டம், உலக இளையோர் தடகள அரங்கில் இந்தியாவின் திறனைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
இரண்டாவது பதக்கம்
இந்திய தடகளப் பிரிவிற்கு கிடைத்த இரண்டாவது பதக்கம்
நடப்பு உலக யு20 சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு கிடைக்கும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
தற்போது உயரம் தாண்டுதலிலும் பஸாந்த் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதால், இந்தியத் தடகள அணி உலகளவில் தனது இருப்பைப் பலமாகப் பதிவு செய்து வருகிறது.
இந்த வெற்றியை விளையாட்டு ரசிகர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்டாடி வருகின்றனர்.