ஒருநாள் உலகக்கோப்பை சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பாஸ் டி லீடே
ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023இன் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானுடன் நெதர்லாந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. எனினும், பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்தின் ஆல்-ரவுண்டர் பாஸ் டி லீடே பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீசிய பாஸ் டி லீடே 9 ஓவர்கள் பந்துவீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேநேரத்தில், அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, 68 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் உட்பட 67 ரன்கள் எடுத்தார்.
4 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த பாஸ் டி லீடே
பாஸ் டி லீடேவுக்கு இது ஒருநாள் உலகக் கோப்பையில் அறிமுக போட்டியாகும். இந்நிலையில், தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒருநாள் உலகக்கோப்பையில் அறிமுக ஆட்டத்தில் இந்த சாதனையை செய்த மூன்றாவது வீரர் ஆனார். இதற்கு முன்னர் ஜிம்பாப்வேயை சேர்ந்த முன்னாள் வீரர்களான டங்கன் பிளெட்சர் மற்றும் நீல் ஜான்சன் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தனர். டங்கன் பிளெட்சர் 1983 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் (69* மற்றும் 4/42), நீல் ஜான்சன் 1999 ஒருநாள் உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராகவும் (59 மற்றும் 4/42) இந்த சாதனையை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் லீடே 31 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.