கிரிக்கெட்டுக்கு ஒரு நீதி.. துப்பாக்கி சுடுதலுக்கு ஒரு நீதியா? டி20 உலகக்கோப்பையை புறக்கணித்துவிட்டு இந்தியா வரும் வங்கதேச துப்பாக்கி சுடுதல் வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கிரிக்கெட் ரீதியான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேச இடைக்கால அரசு தனது நாட்டுத் துப்பாக்கி சுடும் வீரர்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் உள்ள டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கி சுடும் தளத்தில் பிப்ரவரி 2 முதல் 14 வரை நடைபெறவுள்ள ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் அணியை இந்தியா அனுப்ப அந்நாட்டு இடைக்கால அரசு மறுப்பு தெரிவித்தது.
கோரிக்கை
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாதுகாப்பானது அல்ல எனக் கூறி வங்கதேச கிரிக்கெட் வாரியம் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியது. இந்த கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, வங்கதேசத்தை உலகக்கோப்பையிலிருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்துள்ளது.
விமர்சனம்
இரட்டை நிலைப்பாடு என விமர்சனம்
கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி உலகக்கோப்பையைப் புறக்கணித்த வங்கதேச அரசு, துப்பாக்கி சுடும் வீரர்களை மட்டும் இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி வழங்கியுள்ளது விளையாட்டு வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் சார்பில் ரபியுல் இஸ்லாம் மற்றும் ஷைரா அரெஃபின் ஆகிய இரு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்களுடன் பயிற்சியாளர் ஷர்மின் அக்தர் உடன் வருகிறார். துப்பாக்கி சுடும் போட்டிகள் ஒரு பாதுகாப்பான மற்றும் மூடிய அரங்கிற்குள் நடப்பதாலும், பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதாலும் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்று வங்கதேச இடைக்கால அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.