14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் முக்கிய ஆல்ரவுண்டருக்கு இடம்; இந்திய டி20 தொடருக்கான அணியை அறிவித்தது வங்கதேசம்
வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஞாயிற்றுக்கிழமை(செப்டம்பர் 29) அக்டோபர் 6 முதல் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்தது. வங்கதேச கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவித்ததை அடுத்து, நட்சத்திர ஆல்ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸை பிசிபி திரும்ப அணிக்கு அழைத்துள்ளது. மெஹிதி ஹசன் 14 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஆவார். ஆனால் கடந்த சிறிது காலமாக டி20 போட்டிகளில் அவர் விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல்
மெஹிதி ஹசனைப் போல், தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் எமோன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரகிபுல் ஹசனும் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய டி20 கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 6, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முறையே, குவாலியர், டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.