இந்திய அணியில் மீண்டும் ஒரு காயம்! வெளியேறிய வாஷிங்டன் சுந்தர்; ஆயுஷ் படோனி அணியில் சேர்ப்பு
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் போது, அவருக்கு இடது கீழ் விலா பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பந்துவீசும் போது கடும் சிரமத்திற்கு உள்ளானார். காயத்தையும் மீறி முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். ரன் ஓடுவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்ட போதிலும், 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுலுக்குத் துணையாக நின்று இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
பிசிசிஐ
பிசிசிஐ அணியிலிருந்து விடுவிப்பு
எனினும், ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு சில வாரங்கள் ஓய்வு தேவை எனத் தெரியவந்ததால், பிசிசிஐ அவரைத் தொடரிலிருந்து விடுவித்துள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக, ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காகத் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் படோனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது அவருக்குக் கிடைத்துள்ள முதல் சீனியர் இந்திய அணி அழைப்பு ஆகும். டெல்லியைச் சேர்ந்த இந்த 26 வயதான ஆயுஷ் படோனி, உள்நாட்டுப் போட்டிகளிலும் ஐபிஎல் போட்டிகளிலும் காட்டிய சிறப்பான ஆட்டத்திற்காக இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை கவலை
அடுத்த மாதம் (பிப்ரவரி 7) தொடங்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்தக் காயம் இந்திய அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் உலகக்கோப்பை தொடங்குவதற்குள் முழு தகுதியை அடைவாரா என்பது இன்னும் சில நாட்களில் எடுக்கப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே தெரியவரும்.