பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீராங்கனை திடீர் ஓய்வு அறிவிப்பு; காரணம் இது தான்
18 வயதான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஆயிஷா நசீம், வியாழன் (ஜூலை 20) அன்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆயீஷாவின் முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் வாழ்க்கையை முழுவதும் இஸ்லாம் மதத்தின் படி வாழ்வதற்காக கிரிக்கெட்டை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆயிஷா தனது முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் வியாழக்கிழமை தெரிவித்தார். முன்னதாக, ஜனவரி, 2023 இல், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுத்தபோது, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், ஆயிஷாவை மிகச்சிறந்த திறமைசாலி என்று பாராட்டியிருந்தார்.
ஆயிஷா நசீமின் கிரிக்கெட் புள்ளிவிபரம்
ஆயிஷா 2020 இல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார் மற்றும் 34 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 400 ரன்களுக்கு மேல் அடித்தார். அவர் பாகிஸ்தானின் டி20 அணியின் முக்கிய வீராங்கனையாக இருந்தார் மற்றும் கடந்த பிப்ரவரியில் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2023 இல் இடம்பெற்றார். அதில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் 43* ரன்களை எடுத்து, இந்தியாவுக்கு எதிராக 150 ரன்கள் இலக்கை வைக்க உதவினார். பாகிஸ்தான் அணியில் பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விளையாட்டு வாழ்க்கையின் முடிவை நெருங்கி வருவதால், இவர் அணியில் எதிர்கால முகமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவரது முடிவு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டிற்கு பேரிழப்பாக மாறியுள்ளது.