பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய பெண்; வரலாறு படைத்த அவனி லெகாரா
பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றை பாரா துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) படைத்தார். டோக்கியோ 2020 பதிப்பில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் எஸ்எச்1 நிகழ்வின் போது பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்ற அவனி, தற்போது பாரிஸில் அதே பிரிவில் தங்கம் வென்று, இரண்டாவது தங்கத்தைப் பெற்றார். ஒட்டுமொத்தமாக, 22 வயதான அவனி, ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்குப் பிறகு பாராலிம்பிக்ஸில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார்.
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்களின் செயல்திறன்
அவனி லெகாரா தங்கம் வென்ற இதே போட்டியில் பங்கேற்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்றார். ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை பாரிஸில் நடக்கும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பல்வேறு விளையாட்டுகளில் 84 இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, 100மீட்டர் டி25 மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கலம் வென்றார். இதன் மூலம், இந்தியா தற்போது 1 தங்கம் மற்றும் 2 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் வென்றதே பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் சிறந்த செயல்திறனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.