2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் செவ்வாயன்று (ஜூலை 18), 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான திட்டமிடப்பட்ட செலவு மிகவும் அதிகரித்துள்ளதால், போட்டியை நடத்துவதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். டேனியல் ஆண்ட்ரூஸ், கடந்த ஆண்டு தனது அரசாங்கம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அடுத்த சீசனை நடத்த ஒப்புக்கொண்டாலும், எந்த விலை கொடுத்தும் அதை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு இந்த போட்டியை நடத்த இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,000 கோடி தேவை என மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது ரூ.40,000 கோடி வரை செலவாகும் என தெரிய வந்ததால், இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை
போட்டியை நடத்தும் முடிவிலிருந்து விலகுவதாக செய்தியாளர்களிடம் அறிவித்த டேனியல் ஆண்ட்ரூஸ், ஏற்கனவே மதிப்பிடப்பட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம் செலவாகும் என தெரியவந்துள்ள நிலையில், இதற்காக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான நிதியில் கைவைக்க முடியாது என்பதால் விலகும் முடிவை எடுத்தாக தெரிவித்துள்ளார். முன்னதாக, 2026 விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 17-29 தேதிகளில் விக்டோரியாவின் ஜிலாங், பென்டிகோ, பல்லாரட், கிப்ஸ்லேண்ட் மற்றும் ஷெப்பர்டன் ஆகிய பிராந்திய மையங்களில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முடிவு விளையாட்டு வீரர்கள் மற்றும் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, போட்டியை நடத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.