ஆஸ்திரேலிய அணி பகிரங்க மன்னிப்பு கேட்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் வலியுறுத்தல்
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலியா அவுட்டாக்கிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேமரூன் கிரீன் தனது ஓவரின் கடைசி பந்தை வீசியபோது, ஓவர் முடிந்ததாக நினைத்து ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த பேர்ஸ்டோ கிரீஸிலிருந்து வெளியேற வந்தார். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். இது மூன்றாவது நடுவரின் தலையீடு வரை சென்று அவுட் என முடிவாகியது. ஐசிசி விதிகளின்படி இது அவுட் என்றாலும், கேம் ஆப் ஸ்பிரிட்டுக்கு எதிராக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் விமர்சனம்
இந்த அவுட் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜெஃப்ரி பாய்காட் ஆஸ்திரேலிய அணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜெஃப்ரி பாய்காட் இது குறித்து கூறுகையில், "எந்த விலை கொடுத்தேனும் வெற்றி பெற விரும்பினால், கிரிக்கெட் உங்களுக்கானது அல்ல. போட்டியில் கடினமாகவும் நியாயமாகவும் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆஸ்திரேலியா அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி சிந்தித்து முழு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அது நிலைமையை சரிசெய்து அனைவரும் முன்னேறலாம். கிரிக்கட் ஸ்பிரிட்டிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து செயல்பட்டால் அது அவர்களின் வரலாற்றை களங்கப்படுத்திவிடும்." என்று தெரிவித்துள்ளார்.