AUS vs NED: நெதர்லாந்து அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 24வது போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்சல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர். மிட்சல் மார்ஷ் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க, மூன்றாவதாகக் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருடன் கைகோர்த்து ஆஸ்திரேலியாவின் ரன்களை உயர்த்தத் தொடங்கினர். 23 ஓவர்களில் 150 ரன்களைக் குவித்தது இந்தக் கூட்டணி. 24வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித் விட்டுச் சென்ற பணியை செவ்வனே தொடர்ந்தார் நான்காவதாகக் களமிறங்கிய மார்னஸ் லாபுஷேன்.
சதம் கடந்த ஆஸ்திரேலிய வீரர்கள்:
டேவிட் வார்னருடன் இணைந்து 131 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் லாபுஷேனும் 62 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய டேவிட் வார்னர் சதக் கடந்து, அடுத்த சில ஓவர்களிலேயே ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய பேட்டர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க, ஆறாவதாகக் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெஸ் பட்டாசாக விளையாடி 240 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 44 பந்துகளில் 106 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை 400-க்கு அருகில் எடுத்துச் சென்றார் இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய அணி. நெதர்லாந்துக்கு 400 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.