AUS vs NED: 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது நெதர்லாந்து
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேர் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய டேவிட் வார்னர் சிறப்பாக ஆடி சதம் கடந்து அசத்தினார்.
மூன்றாவது மற்றும் நான்காவதாக இறங்கிய ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன் ஆகிய வீரர்களும் அரை சதம் கடந்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.
40 ஓவர்களுக்குப் பிறகு களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 240 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 106 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை கிட்டத்தட்ட 400-க்கு அருகில் கொண்டு சென்றார்.
ஒருநாள் உலகக்கோப்பை
சொதப்பிய நெதர்லாந்து:
பந்து வீச்சில் சொதப்பிய நெதர்ந்தாந்து அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. பந்து வீச்சைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் அதிரடியாக சொதப்பியது நெதர்லாந்து அணி.
5வது ஓவர் தொடங்கி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணியின் சார்பில் விக்ரம்ஜித் சிங் குவித்த 25 ரன்களே அதிகபட்ச ரன்களாகும். மற்ற அனைத்து பேட்டர்களுமே மிகக் குறைவான ரன்களுக்கே ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 21 ஓவர்களுக்குள்ளாகவே 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியாவிடம் 309 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவியது நெதர்லாந்து.
ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மிட்சல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.