ஆசிய பாரா விளையாட்டு 2026: உலக சாதனை சமன் செய்து அசத்திய ஷீத்தல் தேவி!
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி மகளிர் காம்பவுண்ட் தகுதிச் சுற்றில் 704 புள்ளிகளைக் குவித்து உலக சாதனையை சமன் செய்து வரலாறு படைத்துள்ளார். மொத்தமுள்ள 720 புள்ளிகளுக்கு 704 புள்ளிகளை ஈட்டிய 19 வயதான ஷீத்தல் தேவி, இதற்கு முந்தைய ஆசிய சாதனையான 698 புள்ளிகளை விட 6 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுப் புதிய ஆசிய சாதனையையும் நிலைநாட்டியுள்ளார். இதன் மூலம் இந்தியா தனது பாரா வில்வித்தை களத்தில் பதக்க வேட்டையை மிக கம்பீரமாகத் தொடங்கியுள்ளது.
தகுதி
பயல் நாக் அபார ஆட்டம்
இதே மகளிர் காம்பவுண்ட் தகுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான ஒடிசாவைச் சேர்ந்த பயல் நாக், 675 புள்ளிகளைக் குவித்து ஐந்தாவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
பாங்காக்கில் நடைபெற்ற பாரா தொடரில் தங்கம் வென்று அசத்தியவரான பயல் நாக், சர்வதேச அரங்கில் மிகச் சிறந்த பார்மில் இருப்பது இந்திய அணிக்கு இரட்டைப் பதக்க வாய்ப்புகளை பிரகாசமாக்கியுள்ளது.
தகுதிச் சுற்றுகளில் இந்திய வீராங்கனைகள் காட்டிய ஆதிக்கம், நாக் அவுட் சுற்றுகளிலும் தொடரும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பு
பதக்கக் கனவும் நாக் அவுட் எதிர்பார்ப்பும்
2023 ஹாங்சோ ஆசிய பாரா போட்டியில் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றவரும், 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற உலக சாம்பியனுமான ஷீத்தல் தேவி, ஜப்பானில் தரை இறங்கியது முதலே பெரும் பதக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தனது அபாரமான துல்லியத் திறமையால் உலகத் தரவரிசையில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கும் அவர், நாக் அவுட் போட்டிகளிலும் இதே வேகத்தைத் தக்கவைத்து தங்கப் பதக்கத்தை வசப்படுத்துவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.