சீன ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மானசி - துளசிமதி ஜோடி: இந்தியாவுக்குப் பதக்கம் உறுதி
செய்தி முன்னோட்டம்
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பேட்மிண்டன் களத்தில் இந்தியாவின் மானசி ஜோஷி - துளசிமதி முருகேசன் இணை மகளிர் இரட்டையர் SL3-SU5 பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி, இந்தியாவிற்குப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது. குரூப் ஏ சுற்றில் பலம் வாய்ந்த சீனாவின் யுவேமி லியு - டோங்டோங் லீ ஜோடியை எதிர்கொண்ட இந்திய வீராங்கனைகள், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 21-10, 21-17 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர்.
ஒற்றையர் பிரிவு
இந்திய நட்சத்திரங்களின் ஆதிக்கம்
ஆண்கள் ஒற்றையர் SH6 பிரிவில் டோக்கியோ பாராலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் கிருஷ்ணா நாகர், இந்தோனேசியாவின் சுபானை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
SL3 பிரிவில் பாரிஸ் பாராலிம்பிக் தங்கப் பதக்க நாயகன் நிதேஷ் குமார் 21-6, 21-7 என தாய்லாந்து வீரரை வீழ்த்தினார்.
இதே பிரிவில் மூத்த வீரர் பிரமோத் பகத் சீனாவின் சியோங் லிச்சுவானை 21-17, 21-16 எனவும், உமேஷ் விக்ரம் குமார் பிலிப்பைன்ஸ் வீரரையும் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
SL4 பிரிவில் நவீன் சிவகுமார், சூர்யகாந்த் யாதவ் மற்றும் சுகாந்த் கடம் ஆகியோரும், SU5 பிரிவில் ருத்திக் ரகுபதி மற்றும் ஹார்திக் மக்காரும் தங்களது போட்டிகளில் அபார வெற்றிகளைப் பதிவு செய்தனர்.
வீல்சேர் பிரிவு
மகளிர் களத்தின் கலவையான முடிவுகள்
ஆண்கள் வீல்சேர் ஒற்றையர் WH1 பிரிவில் பிரேம் குமார் ஆலே பின்னடைவிலிருந்து மீண்டு வந்து ஐக்கிய அரபு அமீரக வீரரை 20-22, 21-9, 21-10 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
WH2 பிரிவில் ஹரிஸ் மைதிலி வெற்றி பெற்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி புருனே வீராங்கனையை 21-2, 21-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மிரட்டினார்.
மனிஷா ராமதாஸ் சக இந்திய வீராங்கனை சாந்தியாவை வீழ்த்தி முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் SL3 பிரிவில் மானசி ஜோஷி, சஞ்சனா குமாரி, நீரஜ் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
கலப்பு இரட்டையர் WH1-WH2 பிரிவில் அல்பியா ஜேம்ஸ் - பிரேம்குமார் ஆலே இணை வெற்றி பெற்ற நிலையில், மற்ற இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவுக்குக் கலவையான முடிவுகளே கிடைத்தன.