ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி
ஆடவர் இரட்டையர் டென்னிஸில் முதலிடம் வகிக்கும் ரோஹன் போபண்ணா மற்றும் யூகி பாம்ப்ரி ஆகியோர் அடங்கிய இந்திய ஜோடி, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளனர். இரண்டாவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் குறைந்த தரவரிசையில் உள்ள செர்ஜி ஃபோமின் மற்றும் குமோயுன் சுல்தானோவை எதிர்கொண்ட போபண்ணா-பாம்ப்ரி ஜோடி 6-2, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. இரட்டையர் பிரிவில் போபண்ணா டாப் 10 இடத்திலும், ஏடிபி இரட்டையர் தரவரிசையின்படி பாம்ப்ரி உலக தரவரிசையில் 65வது இடத்திலும் உள்ளனர். ஆனால், இவர்களை தோற்கடித்த உஸ்பெகிஸ்தானை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள் இரட்டையர் தரவரிசையில் முதல் 300 இடத்தில் கூட இல்லை என்பதால், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர்களின் முந்தைய செயல்திறன்
இந்த ஆண்டு தனது கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் ரோஹன் போபண்ணா, 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் திவிஜ் ஷரனுடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் ஐந்து தங்கப் பதக்கங்கள் ஆகும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இவற்றில் ஒன்பது தங்கப் பதக்கங்களும், ஆறு வெள்ளிப் பதக்கங்களும், 17 வெண்கலப் பதக்கங்களும் ஆகும். இதற்கிடையே, இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், போபண்ணா மற்றும் பாம்ப்ரி அடுத்து கலப்பு இரட்டையரில் கவனம் செலுத்த உள்ளார்கள்.